Ad Code

Responsive Advertisement

தகுதி பெறாத உதவிப்பேராசிரியர் நியமனங்கள்: 6 மாதங்களில் ஆய்வை முடிக்க யு.ஜி.சி.,க்கு உத்தரவு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, உதவிப்பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கல்லூரிகளில், உதவி பேராசிரியர் நியமனங்களுக்கு கல்வித் தகுதியை யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின், இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, 5,000 ஆசிரியர் பணியிடங்களில், கால் பங்கு தான், யு.ஜி.சி., நிர்ணயித்த தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், யு.ஜி.சி., விதிமுறைகளில் கூறியுள்ளபடி, இரண்டு ஆண்டுகளுக்குள், கல்வித் தகுதியை, ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: யு.ஜி.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கல்லூரிகளில் நடந்த நியமனங்களை ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, ஏராளமான ஆவணங்களை, சென்னைக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. பரிசீலனை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின் முழுமையான வடிவம் தெரிய வரும்' என்றார். மேலும், யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, நியமனங்கள் இல்லை என்றால், அதற்கான விளைவுகள் பின் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பொதுநல மனுவை, இந்த கட்டத்தில் அனுமதிக்க, நாங்கள் விரும்பவில்லை. நியமனங்கள் குறித்த ஆய்வை, யு.ஜி.சி.,யும், பல்கலைக்கழகமும் விரைவுபடுத்த வேண்டியுள்ளது. ஆய்வு செய்வதற்காக, ஆவணங்களை, பல்கலைக்கழகம் விரைந்து கொண்டு வர வேண்டும். இதற்கு, பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும் என, நம்புகிறோம். ஆறு மாதத்திற்குள் பணிகளை முடிக்க, யு.ஜி.சி., முயற்சிகள் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement