Ad Code

Responsive Advertisement

கூடுதல் கட்டணம் வசூல்: 4 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் சில பள்ளிகள் கூடுதலாக கட்டணம் பெற்றுள்ளது தொடர்பாக 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. 2012ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட  விசாரணையில் 12 பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.
அதனால் அந்த பள்ளிகளிடம் இருந்து ரூ.46 லட்சத்து 19 ஆயிரம் திரும்ப  பெறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 4 பள்ளிகள் மட்டும் ரூ.7 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  அந்த 4 பள்ளிகள் வசூலித்த மேற்கண்ட கூடுதல் தொகையை திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கட்டண கமிட்டி பரிந்துரை  செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மேற்கண்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் இதுவரையில் அந்த தொகையை மேற்கண்ட 4 பள்ளிகளும்  திரும்ப கொடுக்க மறுக்கின்றன.

இது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நேரடியாக தலையிட்டு மேற்கண்ட தொகையை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று பெற்றோர்  எதிர்பார்க்கின்றனர். உத்தரவுக்கு மதிப்பில்லையா: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தவிர சிபிஎஸ்இ பள்ளிகளும் கட்டண கமிட்டி  நிர்ணயிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கும்  அதிகாரம் கட்டணம் கமிட்டிக்கு உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அதனால், சர்வதேச பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. மேலும், கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ளும்  பள்ளிகள் நிர்ணயத்துக்கான உத்தரவை பெற்றுக் கொண்டாலேயே அந்த உத்தரவை மதிக்கிறோம் என்றுதான் பொருள். ஆனால் உத்தரவில் கூறப்பட்டுள்ள  அம்சங்களை பல பள்ளிகள் பொருட்படுத்துவதே இல்லை. குறிப்பாக, மாணவர் சேர்க்கையின்போதோ அல்லது சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும்போதோ  பெற்றோரை பள்ளி வாயிலில் காக்க வைக்ககூடாது. 

பள்ளி வளாகத்தில் அவர்களை அவமரியாதையாக நடத்துதல் கூடாது. பள்ளி வளாகத்தில் கூடாரம் அமைத்து அவர்களை அங்கே உட்கார வைக்க வேண்டும்.  கூடாரம் அமைக்கும் செலவை வேண்டுமானால் வரவு செலவு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அதை கட்டண கமிட்டி பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளது.  ஆனால் பல பள்ளிகள் இப்போதே விண்ணப்பம் வழங்குவதாக அறிவித்து பெற்றோரை பள்ளி கேட்களில் காக்க வைப்பது தொடர்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement