Ad Code

Responsive Advertisement

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
அங்கீகாரம்:தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தின் செயலர் விஜயகுமார், தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 670 கல்வி நிறுவனங்கள், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ளன.ஆசிரியர் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், நடைமுறைகள் தொடர்பான புதிய விதிகளை, தேசிய கவுன்சில் கொண்டு வந்துள்ளது. கடந்த மாதம், 1ம் தேதி, அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

புதிய விதிமுறை:உட்கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி, தொகுப்பு நிதி உயர்வு தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றுவதாக, 21 நாட்களுக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதிய விதிமுறைகளின்படி, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான கால வரம்பு, ஒரு ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை, 100ல் இருந்து, 50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பி.எட்., - எம்.எட்., படிப்புகளை மட்டுமே நடத்தும் கல்லுாரிகள், மற்ற துறைகளான கலை, அறிவியல், சமூக அறிவியல், வணிகம், கணிதம் பாடங்களையும் சேர்த்து நடத்த வேண்டும்.
பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பி.எட்., - எம்.எட்., படிப்புகளை, இரண்டு ஆண்டுகளில் முடிக்க வழி இருந்தது. புதிய விதிமுறையால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதனால், ஆசிரியர்கள் வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது.நிபந்தனை:ஆசிரியர் கல்வி கல்லுாரிகள், 21 நாட்களில், விதிமுறைகளை பின்பற்றுவதாக உத்தரவாதம் அளிக்கத் தவறினால், புதிதாக அங்கீகாரம் அளிக்க மாட்டோம் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட அங்கீகாரம் செல்லாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய விதிமுறைகளில், குறிப்பிட்ட சில பிரிவுகள் செல்லாது என, உத்தரவிட வேண்டும்; அவற்றை அமல்படுத்த, தடை விதிக்க வேண்டும். கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகினர். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழக்கறிஞர் ராமகிருஷ்ண ரெட்டி, ''வழக்கு நிலுவையில் இருப்பதால், 21 நாட்கள் அவகாசம், நடைமுறைக்கு வராது,'' என்றார்.மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச், 16ம் தேதிக்கு, நீதிபதி சிவஞானம் தள்ளிவைத்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement