Ad Code

Responsive Advertisement

முதுகலை ஆசிரியர் சம்பள விகிதத்தில் முரண்பாடு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மணிவாசகன், தாக்கல் செய்த மனு: முதுகலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையே, அடிப்படை சம்பளத்தில் உள்ள வித்தியாசம், 3:2 என்ற விகிதத்தில், நிர்ணயிக்கப்பட்டு வந்தது. மூன்றாவது சம்பள கமிஷனில் இருந்து, இந்த சம்பள விகிதம் பின்பற்றப்பட்டு வந்தது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்களின் சம்பளத்தை விட, முதுகலை ஆசிரியர்கள், அதிக சம்பளம் பெற்று வந்தனர். இந்நிலையில், சம்பள கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, பட்டதாரி ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம், 13,900 ரூபாய் என்றும், முதுகலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம், 14,100 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, கடந்த, 2009ல் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக வரும் வகையில், முதுகலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம், குறைக்கப்பட்டு விட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்குமான, அடிப்படை சம்பளத்தில், 200 ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது. முன், இந்த வித்தியாசம், 1,000 ரூபாய் அளவுக்கு இருந்தது. மூன்றுக்கு, இரண்டு என்ற விகிதம் பின்பற்றப்பட்டிருந்தால், முதுகலை ஆசிரியர்களுக்கு, 20,550 ரூபாய், நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், 14,100 ரூபாய் தான், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு குறித்து, அரசுக்கு பல முறை, மனுக்கள் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பள முரண்பாட்டை களைய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு, அமைக்க வேண்டும். கடந்த, 2009 ஜூனில் இருந்து நியமிக்கப்பட்ட, முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்து பிறப்பித்த அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி, 'நோட்டீஸ்' பெற்று கொண்டார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அரசு பதிலளிக்கும்படி, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement