Ad Code

Responsive Advertisement

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது குடியரசு தின விழாவில் இன்று வழங்கப்படுகிறது


சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது இன்று வழங்கப்படுகிறது.

‘அசோக சக்ரா’ விருது
ராணுவத்தில் சிறந்த சேவை புரிபவர்களுக்கு குடியரசு தினவிழாவையொட்டி மிக உயர்ந்த விருதான ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு அசோக சக்ரா விருது, காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்த் தியாகம் செய்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ் குமார் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.

உயிர்த் தியாகம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25–ந்தேதி காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த 2 தீவிரவாதிகளை படுகாயம் அடைந்த நிலையிலும் தனது உயிரைப் பொருட்படுத்தாது, முகுந்த் வரதராஜன் சுட்டுக் கொன்று சாகசம் நிகழ்த்தினார்.

இதேபோல் நாயக் நீரஜ்குமார், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24–ந்தேதி காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது சக வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன், துணிச்சலுடன் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றார்.

இவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் துணிச்சல் மற்றும் உயிர்த் தியாகத்துக்காக அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.

கீர்த்தி சக்ரா, சூர்ய சக்ரா
இதேபோல் கீர்த்தி சக்ரா விருதுக்கு கேப்டன் ஜெய்தேவ், சுபேதார் அஜய் வர்தன், சுபேதார் கோஷ்பகதூர் ஆகிய 3 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் அஜய் வர்தனுக்கு மரணத்துக்கு பின்பு வழங்கப்படுகிறது. இதேபோல் சூர்ய சக்ரா விருதுக்கு 9 ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நேற்று வெளியிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement