Ad Code

Responsive Advertisement

பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு இடையே குறைவான சம்பள வித்தியாசம் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு ஐகோர்ட்டு உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் குறைவான சம்பள வித்தியாசம் நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை ஆசிரியர்கள் வரதன், ராஜேந்திரன், ஐய்யப்பன் ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

3 வகையான ஆசிரியர்கள்
தமிழகத்தில், 1 முதல் 5–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களும், 6 முதல் 10–ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களும், 11 மற்றும் 12–ம் வகுப்புகளுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பாடம் நடத்தி வருகிறோம்.

இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் சம்பளத்தில் அதிக வித்தியாசம் வைத்து 3–வது சம்பள கமிஷன் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டப்படிப்பை முடிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஒரு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோல், அவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், உயர் நிலைப்பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

சம்பள வித்தியாசம்
ஆனால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த சலுகைகள் இல்லை. அவர்கள் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது அரிதானது. இதனால், காலம் முழுவதும் ஆசிரியர்களாக பணியாற்றி பலர் ஓய்வு பெறுகின்றனர். இந்த நிலையில் 7–வது சம்பள கமிஷன், அடிப்படை சம்பளமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.13,700 என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.13,900 என்றும் நிர்ணயம் செய்துள்ளது. இதனால், அதிகம் படித்துள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், எங்களைவிட குறைவாக படித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வித்தியாசம் வெறும் ரூ.200 மட்டுமே உள்ளது. அதிகம் படித்த எங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சம்பள வித்தியாசம் மிக குறைவாக நிர்ணயம் செய்திருப்பது சட்டவிரோதமாகும்.

அரசாணை
இதில், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டப்படிப்பை முடிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க சம்பளத்தினால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைவிட அதிக சம்பளத்தை பெறுகின்றனர். 2009–ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று, தமிழக நிதி (சம்பளப் பிரிவு) துறை கடந்த 2009–ம் ஆண்டு ஜூன் 1–ந் தேதி பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

குழு அமைக்க வேண்டும்
மேலும், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடையே உள்ள சம்பள வித்தியாசத்தை சரிசெய்ய சம்பளம் குறைதீர்வு ஆய்வு குழு ஒன்றை ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கவேண்டும். அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக நிதித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த நோட்டீசுகளை, கூடுதல் அரசு பிளீடர் பி.சஞ்சய்காந்தி பெற்றுக்கொண்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement