Ad Code

Responsive Advertisement

43,200 கிலோ உப்பால் பிரம்மாண்ட தேசியக் கொடி: வாணியம்பாடி பள்ளி மாணவர்கள் உலக சாதனை


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, சிகரம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் 43,200 கிலோ உப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி வரையும் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் இப்பள்ளியின் 1,100 மாணவர்கள், 56 ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், 24 பள்ளி நிர்வாகிகள் என 1,180 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். இவர்கள் வண்ணங்கள் கலந்த 43,200 கிலோ உப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய இந்திய தேசியக் கொடியை வரைந்தனர்.

இக்கொடியானது பள்ளி வளாகத்தில் 72 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும், 3,456 சதுர மீட்டர் பரப்பும் கொண்டதாக (37,200 சதுர அடி) அமைக்கப்பட்டது.  இச்சாதனை நிகழ்ச்சி 5 மணி நேரத்தில் நிறைவடைந்தது.

இதனை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளைப் பாராட்டினர். 

இச்சாதனை நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாதெமி (சிங்கப்பூர்) நிறுவனத்தின் இந்திய ஆய்வு அதிகாரி எம்.எஸ். இர்ஃபான் அகமது, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாதெமியின் (மும்பை) தமிழகம்- புதுச்சேரி மாநிலத்தின் ஆய்வு அதிகாரி பி.ஜெகநாதன், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் எல்.ராஜ்கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாணவர்கள் வரைந்த இந்திய தேசியக் கொடியை அளவிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ்களை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

முந்தைய சாதனை முறியடிப்பு: கடந்த 2012, ஆகஸ்டு 9ஆம் தேதி சிங்கப்பூரில் 1,800 பேர் கொண்ட இளைஞர் குழுவால் 18 மணி நேரத்தில் 22,410 சதுர அடியில் அந்நாட்டுக் கொடி வரையப்பட்டது முந்தைய சாதனையாக இருந்தது. அதனை தற்போது வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முறியடித்துள்ளனர்.

உப்பினால் வரையப்பட்ட இந்த தேசியக் கொடி திங்கள்கிழமை (ஜனவரி 26) மாலை 6 மணி வரை கலைக்கப்படாமல் இருக்கும். இதனை பொது மக்கள் நேரில் வந்து பார்வையிடலாம்.

இந்த 43,000 கிலோ உப்பும் விவசாய நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சாதனை முடிந்தவுடன் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேசியக் கொடியின் முன்பு நின்று "தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம், இந்தியாவில் தயாரித்த பொருள்களை மட்டுமே உபயோகிப்போம்' என்ற உறுதிமொழியை ஏற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement