Ad Code

Responsive Advertisement

தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவித்தபடி 13 பல்கலைக்கழக நூலக புத்தகங்களை இணையதளத்தில் படிக்கும் வசதி இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக நூலகங்களில் உள்ள பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி புத்தகங்கள் உள்பட அனைத்து புத்தகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அவை இணையதளத்தில் ஏற்றப்படுகிறது.

மாணவர்கள் உள்பட உலகில் உள்ள யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே இணையதளத்தில் இவற்றை படித்துக்கொள்ளலாம். இந்த வசதி இந்த (ஜனவரி) மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது.

அறிவுத்தலைநகரம் தமிழகம்
இந்தியாவின் அறிவுத்தலைநகரமாகவும், புதுமைத்தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித்துறையின் 13 பல்கலைக்கழகங்களில் நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப்பொருட்களை இணையதளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் மின்தொடர்பு நூலக களஞ்சியங்களை இணையதள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1 கோடியே 86 லட்சம்
மின்–நூல்கள், மின்–இதழ்கள், ஒளிப்படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஆகியவற்றை மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து எளிதில் பெற இந்திட்டம் வழிவகை செய்யும். அனைத்து பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும் இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக்கொள்ள வகைசெய்யும் இந்த திட்டம் ரூ,1 கோடியே 86 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

இந்த அறிவிப்பை ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது 110–வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

குமார் ஜெயந்த் தலைமையில் கூட்டம்
இந்த திட்டம் அறிவித்த உடனே அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆயத்தபணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கான முதல் கட்ட கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் குமார் ஜெயந்த் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் எப்படி பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் ஆகியவை டிஜிட்டல் ஆக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. அதன்படி இப்போது இணையதளம் தயார் ஆகிவிட்டது. அனைத்து பாடப்புத்தகங்களும், ஆராய்ச்சி கட்டுரைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த பணியை அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் சேர்ந்து செய்துவருகின்றன. ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றமும் செயல்படுகிறது.

இணையதளத்தில் பார்க்கலாம்
இந்த பணி நிறைவடைந்து இந்த மாத இறுதியில் இந்த திட்டம் முழுமை அடைகிறது. அதாவது ஒரு மாணவர் அல்லது பொதுவாக உள்ள யாராக இருந்தாலும் நாங்கள் கொடுக்கும் இணையதள முகவரிக்கு சென்று எந்த ஒரு பாடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அப்படியே படிக்கலாம். முதல் கட்டமாக ஆங்கிலத்தில் கொண்டுவரப்படுகிறது.

இது உலகம் முழுவதும் யாராக இருந்தாலும் படிக்க இந்த வசதி கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement