Ad Code

Responsive Advertisement

இன்று முதல்! : 'டிவிடி' மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் : பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக புதிய யுக்தி

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில், கல்வித் துறை 'டிவிடி' மூலம் பாடம் நடத்தும் முறையை செயல்படுத்தி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 307 பள்ளிகளிலும், இன்று முதல், வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், 171 உயர்நிலைப் பள்ளிகள், 136 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 307 அரசு பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில், 89.19 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில், 88.23 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில், பெரும்பாலும் தனியார் பள்ளிகள் தான், 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றன.
அரசு பள்ளியிலும் சென்டம்...
இந்த ஆண்டு, அரசு பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வித் துறை பல்வேறு திட்டங்கள் மற்றும் புதிய செயல்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதற்காக, மாநில கல்வித் துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடம் வாரியாக, அனிமேஷன் முறையில் 'டிவிடி' தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஏழு 'டிவிடி'க்கள்
தமிழ்-2, ஆங்கிலம்-1, கணிதம், அறிவியல், சமூக அறிவியலுக்கு தலா ஒன்று, அனைத்து பாடங்களிலும் ஒரு வரி வினா, விடைக்கு ஒன்று என, மொத்தம், ஏழு 'டிவிடி'க்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், ''மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம், 307 பள்ளிகளுக்கும், அனிமேஷன் முறையில் தயாரான, பாடங்களின் 'டிவிடி'க்கள் வழங்கப்பட்டு உள்ளன'' என்றார்.
மேலும், ''கடந்த ஆண்டு, 75 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இரண்டு நாட்களாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம், இந்த ஆண்டு, அரசு பள்ளிகளின் தேர்ச்சி, 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டு வருகிறோம்,'' என்றார். அதே போல், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்ட கல்வித் துறை தயாரித்துள்ள, பிரத்யேகமான 'டிவிடி' யும் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் பொங்கல் விடுமுறை என்பதால், இன்று முதல், அனைத்து பள்ளிகளிலும், 'டிவிடி' மூலம் வகுப்புகள் நடைபெறும் என, தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.


இரண்டு ஆண்டுகளின்
தேர்ச்சி விகிதம்
பத்தாம் வகுப்பு
2013 85.34%
2014 88.23%
பிளஸ் 2
2013 86.85%
2014 89.19%

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement