Ad Code

Responsive Advertisement

TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் வெளியாகும்

குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தார்.

குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகளை வழங்கிய பிறகு, அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

குருப் 2 ஏ தேர்வில் நேர்காணல் இல்லாத பணியிடங்களுக்கான துறை ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ரேங்க் பட்டியலில் 9 முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

குருப் 2 ஏ தொகுதியில் நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதியவர்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 399 பேரின் மதிப்பெண், தகுதிப் பட்டியல் ஆகியவை கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தலைமைச்செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் உள்பட 29 துறைகளில் காலியாக உள்ள உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான 2 ஆயிரத்து 760 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் தரவரிசையின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை (டிச. 29) முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை தினமும் 200 தேர்வர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்படும்.

முதல் கட்டமாக 2 ஆயிரத்து 200 தேர்வர்களுக்கு தகுதி மதிப்பெண் அடிப்படையில் அழைப்புகள் அனுப்பட்டுள்ளன. இதற்கான தகுதிப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 9 பேர் பொறியியல் பட்டதாரிகள். முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் காலியிடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் அழைக்கப்படுவர். கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கலந்தாய்வு ஜனவரி 27 ஆம் தேதி நடைபெறும்.

குருப் 1 தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாள்களில் வெளியிடப்படும். அதன் பின்னர், முதன்மைத் தேர்வு நடத்தப்படும். வரும் ஆண்டுக்கான ஆண்டு வரைவுத் திட்ட காலண்டர் ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement