Ad Code

Responsive Advertisement

NIT, IIT போன்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

என்.ஐ.டி., ஐஐடி போன்ற மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் 2015-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இதற்கு விண்ணப்பிக்கும் தேதி வருகிற 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.

இந்தத் தேர்வு முதலில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (மெயின்), பின்னர் ஜே.இ.இ. இரண்டாம் நிலை தேர்வு (அட்வான்ஸ்டு) என இரு விதமாக நடத்தப்படும்.

இதில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி போன்ற மத்திய கல்வி நிறுவன படிப்புகளில் சேர முடியும்.

ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. இரண்டாம் நிலைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 2015-ஆம் ஆண்டுக்கான இத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சி.பி.எஸ்.இ. முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் தேதியை டிசம்பர் 26-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை டிசம்பர் 27-ஆம் தேதி வரை செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள், தேர்வு அறை அனுமதிச் சீட்டை 2015 மார்ச் 1-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான எழுத்துத் தேர்வு 4-4-2015 அன்று நடத்தப்படுகிறது. ஆன்-லைன் தேர்வு 10-4-2015, 11-4-2015 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தேர்வு முடிவு 27-4-2015 அன்று வெளியிடப்படும். பின்னர் ஜே.இ.இ. மதிப்பெண், விண்ணப்பதாரரின் பிளஸ்-2 மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு 7-7-2015 அன்று வெளியிடப்படும். இதனடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர முடியும்.

ஜே.இ.இ. இரண்டாம் நிலைத் தேர்வு 24-5-2015 அன்று நடத்தப்பட உள்ளது. ஜே.இ.இ. பிரதானத் தேர்வு தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்த இரண்டாம் நிலைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஜே.இ.இ. தேர்வை ஒருவர் 3 முறை மட்டுமே எழுத முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement