Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவர் தற்கொலை: மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

தனியார் பள்ளி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 1 மாணவரின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்தப் பிரேதப் பரிசோதனையை விடியோ எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், செப்பலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராமநாதன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நான் குடும்பத்துடன் நெய்வேலியில் வசித்து வருகிறேன். நெய்வெலி நிலக்கரி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றுகிறேன். என்னுடைய மூத்த மகன் ராம்குமார் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான்.

கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் எனது மனைவிக்கு, அந்தப் பள்ளியிலிருந்து ஒரு தகவல் வந்தது. அதில், எனது மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனது மகன் இறப்பு குறித்து விசாரணை செய்ய வேண்டுமென காவல் நிலையத்தில் விரிவான புகார் அளித்தேன்.

ஆனால், எனது மகன் இறப்பை சந்தேக மரணம் எனப் பதிவு செய்து, அதன் பிறகு தற்கொலை என மாற்றிவிட்டனர். எனவே, எனது மகன் இறப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், எனது மகன் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இறந்த மாணவரின் உடலை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரின் முன்னிலையில் ஜனவரி 2 அல்லது அதற்கு முன்பாக மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்தப் பரிசோதனையை அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடியோகிராஃபரால் விடியோ எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஜனவரி 22-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement