Ad Code

Responsive Advertisement

புதிய பரிசோதனை முயற்சி: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்...

 விண்ணில் சீறிப் பாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். | படம்: ம.பிரபு
ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


இஸ்ரோ தலைவர் பெருமிதம்:

"இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக கருதப்படும் இந்த முயற்சி வெற்றி பெற்றது. இதில் பெருமிதம் அடைகிறேன். சாதனை வெற்றியை நிகழ்த்த உதவிய அனைவருக்கு என் மனமார்ந்த நன்றி. திட்டமிட்டபடி மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டது" என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி கடலில் விழுந்தது:

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் சுமார் 126 கி.மீ தூரம் வரை சென்ற பிறகு, மனிதன் பயணிப்பதற்கான மாதிரி விண்கலம் மட்டும் சுமார் 19-வது நிமிடத்தில் திட்டமிட்டபடி அந்தமான் அருகே கடலில் விழுந்தது.

அதை கொண்டுவர அப்பகுதியில் கடற்படையும், விமானப்படையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலில் இருந்து மீட்கப்படும் விண்கலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் மைல் கல்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சிக்காக மனிதனை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்ப பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக இஸ்ரோ வரலாற்றில் முதல் முறையாக 630 டன் எடை கொண்ட ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட், 3,735 கிலோ எடை கொண்ட, விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதன் பயணிக்கும் மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லவிருக்கிறது. இது மனிதன் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமியை வந்தடைவதற்கான பரிசோதனையே.

இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

முன்னதாக ராக்கெட்டின் அனைத்து பாகங்களும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பாகங்களை பொருத்தும் மையத்தில் பொருத்தி முழுமையான ராக்கெட் உருவாக் கப்பட்டது. அப்போது மனிதன் பயணிக்கும் மாதிரி விண்கலமும் அதில் பொருத்தப்பட்டது. பின்னர் முழுமையடைந்த ராக்கெட், ராக்கெட் ஏவுதளத்துக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதையடுத்து, ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்பும் பணி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திட்டமிட்டப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஏவப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement