Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் விவரங்களில் பிழைகளை நீக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்படும். அதன்பிறகு, விடைத்தாள் முகப்புச் சீட்டு அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முகப்புச் சீட்டில் மாணவர்களின் பதிவு எண், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களும், முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் ரகசிய பார்கோடு எண்ணும் அச்சிடப்படும். விடைத்தாள் முகப்புச் சீட்டில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து மாணவர்கள் கையெழுத்திட்டால் மட்டும் போதும்.

முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் "டம்மி' எண்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்படும் ரகசிய பார்கோடு எண் முறை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையின் மூலம் முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களை வேறு மாவட்டங்களில் மதிப்பீடு செய்வது, விடைத்தாளுக்குரிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, ரகசியத்தன்மையைப் பாதுகாப்பது போன்ற பணிகள் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிமைப்படுத்தப்பட்டன. அதனால், தவறுகளும் வெகுவாக குறைந்தன.

மொழிப்பாடங்களுக்கு பக்கங்கள் குறைப்பு: பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 40-லிருந்து 32 ஆகவும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 30-லிருந்து 22 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொழிப்பாடத் தேர்வுகளில் கடந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள் அதிகப் பக்கங்களைப் பயன்படுத்தவில்லை. இதனையடுத்து, பக்கங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement