Ad Code

Responsive Advertisement

நலம் பெறுமா மனம்! மாணவர்கள் உளவியல் பிரச்னைக்கு தீர்வில்லை - பெயரளவில் 'ஆலோசனை மையம்'

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, 'நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்' தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதற்காக, தமிழகத்தில், 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் குறைந்தபட்சம், மூன்று மாவட்டங்களும், அதிகபட்சமாக நான்கு மாவட்டங்களும் அடங்கும். ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் மொத்தம், 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பெண்களும், ஏழு ஆண் உளவியல் நிபுணர்கள் உள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து மட்டுமே, 80 சதவீத ஆலோனைகள் வழங்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு, உடல் ரீதியான மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு, தீர்வு காண உளவியல் நிபுணர்கள் அமர்த்தப்பட்டாலும், அதில், பெரிதாக பலனில்லை என்பதே உண்மை.
ஆண் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மண்டலங்களில் மாணவிகளும், பெண் உளவியல் நிபுணர்கள் உள்ள மண்டலங்களில் மாணவர்களும், தங்கள் பாலியல் ரீதியான குழப்பங்களுக்கு விளக்கங்களை வெளிப்படையாக கேட்கவும், தெரிந்துகொள்ளவும் தயங்குகின்றனர்.மேலும், இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங் வழங்கவேண்டியது அவசியம். ஆனால், மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒரு உளவியல் நிபுணர் மட்டுமே உள்ளதால், மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் மீது கவனம் செலுத்த இயலவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,'வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்ல தயங்குகின்றனர்.
ஆனால், உளவியல் நிபுணர்களின் வித்தியாசமான அணுகுமுறை மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற சந்தேகங்களை, பெண் உளவியல் நிபுணரிடம் கேட்டறிந்துகொள்ள தயக்கம் காண்பிக்கின்றனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஆண் மற்றும் பெண் என இரண்டு உளவியல் நிபுணர்களை நியமிக்கவேண்டும்' என்றார்.
தலைமையாசிரியர் ஒரு வர் கூறுகையில், 'பாலியல் சார்ந்த பல்வேறு சந்தேகங்களால், தானாக தடம் மாறுபவர்கள், பிறரிடம் சிக்கிக்கொள்பவர்கள் என இரண்டு பிரிவு மாணவ, மாணவிகள் உள்ளனர்.
பள்ளிகளுக்கே ஆபாச வீடியோக்கள் கொண்ட மெமெரி கார்டு, மொபைல் போன் போன்றவற்றை திருட்டுத்தனமாக கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பொருட்களை பறிமுதல் செய்து, கண்டிப்பதுடன் பெற்றோர்களை அழைத்து, தகவல் தெரிவிக்கிறோம். இதனால், மட்டும் மாணவர்கள் மத்தியில் மாற்றங்களை காண இயலவில்லை' என்றார்.

ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
கோவை :மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில், ஒன்பது மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தன. கோவை மாவட்டத்தில், திருமுருகன் நகர் மாவட்ட பயிற்சி நிறுவனம் சார்பில், அரசு பெண்கள் துணி வணிக மேல்நிலைப்பள்ளியில் இப்பயிற்சி வகுப்புகள் நடந்தன. பயிற்சி வகுப்பில், மன அழுத்தம் கட்டுப்பாடு, பிரச்னைக்கான தீர்வு, தொடர்பு திறன், புதிய சிந்தனை மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகளை, மாவட்ட பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் அளித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement