Ad Code

Responsive Advertisement

முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த, 2011 டிசம்பர் மாதம், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பிரிவுகளில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு, மூன்று நாட்கள், மூன்று மணி நேரம் பணியாற்றும் இவர்களுக்கு, தொகுப்பூதியமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற ஒரே நம்பிக்கையில், எவ்வித சலுகையும் எதிர்பார்ககாமல் குறைந்த ஊதியத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு மூன்றாண்டுகள் கழிந்து, தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டாலும், போட்டித்தேர்வு கட்டாயப்படுத்தியுள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முழுநேர கலை ஆசிரியர்கள் பணியிடங்கள், கடந்த 2011ம் ஆண்டுக்கு பின், இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில், போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'தொகுப்பூதிய உயர்வு, கடந்த ஏப்ரல் முதல் அரியர்ஸ், இனி வரும் மாதங்களில் இ.சி.எஸ்., முறை ஊதியம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அறிவித்தாலும், போட்டித்தேர்வு மூலம் முழுநேர ஆசிரியர்கள் நியமனம் என்பதால், பகுதி நேர ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement