Ad Code

Responsive Advertisement

கோவை, ஈரோடு கல்லூரி மாணவர்களால் கல்லூரி கல்வி இயக்ககம் முற்றுகை

கோவை மற்றும் ஈரோட்டில் இயங்கி வரும், அரசு உதவி பெறும் கல்லூரிகளை, அரசே ஏற்று நடத்தக் கோரி, மாணவர்கள், சென்னையில், கல்லூரிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டனர். கோவை, சி.பி.முத்துச்சாமி செட்டியார் கல்லூரி மற்றும் ஈரோடு சிக்கராய நாயக்கர் கல்லூரி என, இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி, கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்; கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்; கல்லூரிகளில், போதுமான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கைகளை, வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு கல்லூரிகளை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, கல்லூரி கல்வி இயக்குனரை சந்திக்க வந்தனர். அவர்கள், வளாகத்திற்குள் நுழைய முயன்ற போது, போலீசார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும், கல்லூரி கல்வி இயக்குனர், தேவதாசை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், 'கோரிக்கை குறித்து, கல்லூரி கல்வி இயக்குனரை சந்தித்து மனு அளித்தோம். அவர், எங்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement