Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் படைப்பாற்றலுக்கு இங்கு இடம் இல்லை!

மலரும் பூவுக்கருகில் அமர்ந்து, வாசத்தை நுகர்பவனுக்கு ஏற்படும் உணர்வுகளை, கோடுகளாக இணைத்து சித்திரங்களாக உருமாற்றி கொண்டிருந்தார், ஓவியர், கலை இயக்குனர், கலை ஆய்வாளர் என, பன்முகம் கொண்ட ட்ராட்ஸ்கி மருது. இளமையும் இளைஞர்களும் சூழ, கணினியும், வரைபலகையும் சிநேகிக்க, தன் கலைக்கூடத்தில் இருந்த அவரிடம் பேசியதில் இருந்து...
* கலைஞர்களாக பரிணமிக்க, தகுந்த சூழல்கள், இன்றைய ஆரம்ப கல்வியில் இருக்கின்றனவா?


இல்லை என்பதை, வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும் பதிவு செய்ய விரும்புகிறேன். மாணவர்களுக்கான கற்பனைவெளியும், படைப்பாற்றலை வெளிக்கொணரும் சூழலும் இறுக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். பாடத்திட்டம் என்பது, மனப்பாடம் சார்ந்ததாக, இயல்பாக விளங்கி கொள்ள முடியாததாக உள்ளது. ஆரம்ப கல்வியிலேயே, கலை சார்ந்த பாடப்பிரிவுகளை வகுத்து, நேரம் ஒதுக்கி, மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப, வழிநடத்த வேண்டும்.

* படைப்பிலும், ரசனையிலும், நம் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் இடைவெளி இருக்கிறதா?


நிறைய இருக்கிறது. தொழில்நுட்ப உலகின் முன்னணியில் இருக்கும், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மக்களால், ஓவியங்கள் இல்லாத உலகத்தை நினைத்து பார்க்கவே முடியாது. சமீபத்தில், நான் பிரான்ஸ் சென்றிருந்தேன். அங்குள்ள விமான நிலையத்தில், மிகப்பெரிய திரைப்பட விளம்பரங்களுக்கு நிகராக, வேறு விளம்பரங்கள் இருந்தன. அவை, அனைத்தும், அடுத்து வரப்போகும் காமிக்ஸ் புத்தகங்களுக்கான விளம்பரங்கள். அங்கெல்லாம், ஓவியத்தை கொண்டாடுவதை போலவே, ஓவியர்களையும் கொண்டாடுகின்றனர். நம் நாட்டில், அந்த மாதிரியான நிலை, எப்போதுமே இருந்ததில்லை.

* ஓவியரின் கற்பனை, விற்பனை தவிர, ஓவியங்களால் வேறென்ன நன்மைகளை, சமூகத்திற்கு செய்துவிட முடியும்?


பல மணிநேரம் விளக்கியும், பல பக்கங்களில் எழுதியும், விளக்க முடியாத கருத்து, ஒரு ஓவியத்தின் மூலம், விளங்கிவிடும்.

* உண்மையான ஓவியங்களையும், ஓவியர்களையும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் இருட்டடிப்பு செய்து விட்டதாக, பல ஓவியர்களால் புகார் கூறப்படுகிறதே?


காலம், தன் கடமையை செய்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும், முன்னேற்றம் வந்துகொண்டேதான் இருக்கும். உலகம் முன்னேறிக் கொண்டு இருக்கட்டும்; நான் மட்டும், இருந்த இடத்திலேயே இருப்பேன் என்பதில், என்ன நியாயம் இருக்க முடியும்? மண்ணிலும் கல்லிலும் இருந்த ஓவியம், துணியிலும், காகிதத்தி லும் வந்தது போல், கணினியிலும், கைபேசியிலும் வந்திருக்கிறது. இந்த உண்மையை ஏற்க மறுத்து, காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப ஓடாதவர்களால், கூறப்படும் புகார்கள் தான் அவை. புகார் கூறுவதால், அவர்களுக்கு தான் நட்டமே தவிர, கலைக்கு இல்லை. ஒரு காலத்தில், பலரின் உழைப்புக்குப்பின், பட சுருளுக்குள் சென்ற புகைப்படங்களும், திரைப்படங்களும், காலப்போக்கில் கணினி மயமாகின. ஆனால், திரைப் படங்கள் கணினி மயமாக மாறும் என்பதை, ஏற்க மறுத்த, பிரபல படச்சுருள் தயாரிப்பு நிறுவனங்கள், தற்போது, முகவரி இழந்ததோடு, அவர்களை நம்பியோரையும் மூழ்கடித்து விட்டன.


* வளர்ந்து வரும் ஓவியன், எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்? மருதுவின் இளமையுடன் ஒப்பிட்டு விளக்க முடியுமா?


மதுரையில் வாழ்ந்த, என் இளமைக் காலம், தேடல் நிறைந்ததாகவும், தேடலுக்கான களம் கொண்டதாகவும் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது, நம் ஓவியர்களும், வெளிநாட்டு ஓவியர்களும் வரைந்த, காமிக்ஸ் புத்தகங்களும், அறிஞர்களின் புத்தகங்களும் என் அப்பாவின் மூலம் எளிதாக கிடைத்தன. கார்ட்டூன் படங்களும், ஹாலிவுட் படங்களும் பார்க்கும் வாய்ப்பும் அப்படித்தான் கிடைத்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா, அழகர் உலா, அது சார்ந்த கிராமிய கலைகள், அங்கு வேடிக்கை பார்த்த மனிதர்கள், மண் குதிரை செய்யும் குயவர்கள், ஜாலங்களுடன் பறக்கும் பறவைகள், நளினங்களுடன் அசையும் மரங்கள், என, எல்லாவற்றையும் கூர்ந்து ரசித்தேன்.


என் அப்பா, கம்யூனிச சிந்தனை உடையவராக இருந்ததால், முற்போக்கான நாடகங்களை நடத்திய பாஸ்கர தாஸ், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கள் எளிதாக கிடைத்தன. அதேநேரம், பவளக்கொடி, கட்டபொம்மன் போன்ற பாரம்பரிய நாடகங்களையும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய சுவர்களில், பலரின் முன்னிலையில் கூச்சமோ, பயமோ இல்லாமல் வரையும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன. அப்போதே, நான் மிகச்சிறந்த கேமராக்களை கையாளும் திறமையை வளர்த்துக் கொண்டேன். நான், ரசித்து எடுத்த படங்களை சித்திரங்களாகவும், சிலைகளாகவும் வடித்துப் பார்த்தேன். தொடர்ந்து ஒப்பீட்டு பார்வையில், என் ஓவியங்களை ஆராய்ந்தேன். எழுபதுகளில், சென்னை ஓவிய கல்லூரியில் படித்தபோது, மாணவர்கள், ஆசிரியர்களின் குறைகளில் இருந்தும், கல்லூரிக்கு வெளியில் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.


மரபை கற்றுக்கொண்டு, அதை உடைத்துக் கட்டும் புதிய முயற்சிகளில் இறங்கினேன். நவீன ஓவியங்களை, அர்த்தமுள்ளதாகவும், புதிய 'ஸ்ட்ரோக்'குகளை கொண்டு வரைவதிலும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். எண்பதுகளில், கணினி மூலம் ஓவியம் வரைந்த முதல் தமிழ் ஓவியன் நான் என்பதால், பலரின் விமர்சனத்திற்கும் உள்ளானேன். ஆனால், எதிர்காலம் குறித்த கவலையோ, பயமோ எனக்கு இருந்ததில்லை. இன்று, பத்திரிகை, திரைப்பட துறைகளிலும், புதிய முயற்சியில் இறங்கிக்கொண்டே இருக்கிறேன். இன்று வரை, என் நிறுவனத்தில் பணியாற்றும், இளைஞர்களிடம் இருந்தும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். எதிர்காலத்தில், செய்தித்தாள்கள், பழைய செய்திகளை தான் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும். காரணம், சமூக வலைத்தளங்களில், முப்பரிமாண விளக்கங்களுடன், உடனுக்குடன் செய்திகள், உள்ளங்கைக்குள் வந்து விழுந்து விடும். செய்தித்தாள்களில், செய்தி கட்டுரைகள் தான் வரும். காட்சியல் ஊடகங்களும், திரைப்படங்களும், மாற்றப்பட்டு உள்ளங்கைக்குள் வரும். அப்போது, ஓவியனுக்கு மிகப்பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. ஒரு ஓவியன், முப்பரிமாண படங்களை உருவாக்குபவனாக இருக்க வேண்டும். அதனுடன், இசை, படத்தொகுப்பு உள்ளிட்ட நுணுக்கங்களின் அறிவையும் பெற்றிருக்க வேண்டும். புதிய முயற்சிகளை செய்பவனாக இருக்க வேண்டும். அப்போதுதான், அவனால் மொழிகளை கடந்து, உலக எல்லைகளை தாண்டி, ஊடுருவ முடியும். ஓவிய கல்லூரி, திரைப்பட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இவற்றை உணர வேண்டும்.

- நடுவூர் சிவா -

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement