Ad Code

Responsive Advertisement

வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை

வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உடுமலை சுற்றுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 80 சதவீத அரசு பள்ளிகள், கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. வீட்டில் இருந்து பள்ளி கிளம்பும் மாணவர்கள், சில நேரங்களில் வகுப்புகளுக்கு செல்லாமல் வெளியே சுற்றுவதுண்டு. அவ்வாறு சுற்றும் மாணவர்கள் எண்ணிக்கை, உடுமலை பகுதிகளில் அதிகமாக உள்ளது.

பள்ளியின் மொத்த மாணவர்களில், 10 சதவீதத்தினர் வகுப்புகளுக்கு சரிவர வருவதில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர். வகுப்புக்கு வராத மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்ட தயங்குகின்றனர். இதுகுறித்து பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது, முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மாணவர் சேர்க்கையின்போது பள்ளிக்கு வரும் பெற்றோர், அதன்பின் அவ்வப்போது வகுப்பு ஆசிரியரை சந்திப்பதில்லை.

ஆசிரியர் - பெற்றோர் இடைவெளியால், வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, ஆசிரியர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வெளியே சுற்றித்திரியும் அவர்களை, சில நேரங்களில் ஆசிரியர்கள் தேடிப்பிடித்து, பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "சீருடை அணிந்து வெளியே சுற்றும் மாணவர்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கு ஆசிரியர்களே பொறுப்பாக வேண்டியுள்ளது. கல்வி, நல்லொழுக்க பண்புகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதில், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடுமலை பகுதியில், பள்ளி நேரத்தில் வெளியே சுற்றும் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அனுப்ப, காவல்துறை உதவி நாடப்பட்டுள்ளது" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement