Ad Code

Responsive Advertisement

TRB : ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புக்குத் தடை

ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தைச் சேர்ந்த ஏ.சுடலைமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இவ்வாறு உத்தரவிட்டார்.

மனு விவரம்: நான் சீர்மரபினர் பிரிவுக்கு உள்பட்ட மறவர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றுள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்நிலையில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 669 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பிரமலை கள்ளர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1993-இல் தமிழக அரசு நிறைவேற்றிய இடஒதுக்கீடு சட்டத்துக்கு முரணாக உள்ளது. நான் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் எனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2014 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவுக்கு 10 நாள்களில் பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement