Ad Code

Responsive Advertisement

கற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா? துவக்கநிலை பயிற்சி அவசியம்

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஏற்படும், 'டிஸ்லெக்சியா' பாதிப்புக்கு, பொதுத்தேர்வின் போது சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக, துவக்க கல்வி நிலையிலே, மாணவர்களின் நடவடிக்கையை கண்காணித்து, பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மூளை நரம்புகளின் இயக்க கோளாறால் ஏற்படும் நோய் டிஸ்லெக்சியா. இது, மூளையின் செயல்திறன் குறைவால், பார்ப்பது, கேட்பது, கற்பது உள்ளிட்ட சாதாரண நிகழ்வுகளில் கூட, குழந்தைகளின் மூளைத் திறனை மந்தமடைய செய்கிறது. இப்பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, சொற்களை புரிந்து கொள்ளும் திறன், எழுத்துகள் உச்சரிப்பு, எண்களின் மதிப்பு என எல்லாவற்றிலும், மாறுபட்ட உள்வாங்கி கொள்ளும் தன்மையே இருக்கும்.குறிப்பாக, குழந்தைகளின் அடிப்படை கற்றல் வயதான, 3 முதல் ௮ வயதுக்குட்பட்ட நிலையிலே, டிஸ்லெக்சியா பாதிப்பை கண்டறிய முடியும். இருப்பினும் பெரும்பாலானோர், வளர்ச்சி முதிர்வில் சரியாகிவிடும் என, நினைத்து சிகிச்சைக்கு செல்வதில்லை.
பாதிப்புள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் ஒரே சலுகை, பொதுத் தேர்வின் போது, கூடுதல் நேரம் ஒதுக்குவதும், பிரத்யேக ஆசிரியர் உதவியுடன் தேர்வை எதிர்கொள்ளுதல் மற்றும் மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே எழுதுவதற்கு அனுமதி மட்டுமே. இச்சலுகையால், மாணவர்களது கல்வித்தரம் உயரவோ அல்லது, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்போ மிகக்குறைவு. எனவே, ஆரம்ப கல்வியிலே கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் நிலையை ஆய்வு செய்து, பிரத்யேக பயிற்சிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, ''கோவையை பொறுத்தவரை, ஆண்டுதோறும் பொதுத்தேர்வின் போது, குறைபாடுள்ள மாணவர்களுக்கான சலுகை குறித்து, பள்ளிகளில் தகவல் அளிக்கப்படுகிறது. கடந்தாண்டில் மட்டும், டிஸ்லெக்சியா குறைபாடுடன் தேர்வெழுதிய 28 பேரில், 12 பேர் அரசு பள்ளி மாணவர்கள். இது, ஆரம்ப கட்டத்திலே சிகிச்சை அளிக்க வேண்டிய பிரச்னை தான். இருப்பினும், 10 மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், காலாண்டு தேர்வின்போதே, பின்தங்கிய மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, பயிற்சி அளிக்க, ஏற்பாடு செய்யப்படுகிறது,'' என்றார்.
'விழிப்புணர்வு இல்லை'
மனநல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''டிஸ்லெக்சியா குறைபாடு குறித்து, பெற்றோர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. சாதாரண குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து மாறுபடும்போதே, சிகிச்சை அளிக்க எவரும் முன்வருவதில்லை. முதிர்ச்சியடைந்த நிலையிலான சிகிச்சையின் வாயிலாக, உடனடி பலனை பெற முடியாது. தவிர, டிஸ்லெக்சியாவை பொறுத்தவரை, நோயின் வீரியம் பொதுவானதல்ல; தொடர் பயிற்சி, மூளைக்கு சிந்திக்கும் வேலை ஆகியவற்றை சிகிச்சை வாயிலாக அளிப்பதன் மூலம், நல்ல முன்னேற்றத்தை காண முடியும். இதற்கு, மனநல மருத்துவரை அணுகுவது அவசியம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement