Ad Code

Responsive Advertisement

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை பள்ளி ஆசிரியர்

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அருமனையை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். கத்தி படத்தில், கதாநாயகி சமந்தா தனது  விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல் நம்பர் கொடுக்கிறார். விஜய் இந்த நம்பரை பலமுறை சொல்லி, சொல்லி வருவதாக காட்சி அமைந்துள்ளது. தொடர்ந்து, விஜய் இந்த நம்பரில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சி நம்பர் எனவும், தாங்கள் நாய்பிடிக்கும் பிரிவு எனவும், கூறுவது படத்தில் வேடிக்கையாகவும் உள்ளது.

அருமனை ஆசிரியர் நம்பர்

ஆனால், இந்த நம்பர் குமரி மாவட்டம் அருமனையை சார்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரின் செல் நம்பராகும். இவர் பல மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவனத்தில் இருந்து இந்த நம்பரை பெற்றுள்ளார். ஆனால், கத்தி படம் திரைக்கு வந்த அன்று முதல் இந்த ஆசிரியர் நிலைகுலைந்து போயுள்ளார். திரையரங்கத்தில் இருந்து கொண்டே ரசிகர்கள் போன் செய்து பேசுகிறார்கள்.

தனக்கு சம்பந்தம் இல்லாத போன் அழைப்புகளால் ஆசிரியர் செய்வதறியாது திகைத்து போய் உள்ளார். இவரோ திரைப்பட வாசம் குறைந்தவர். ஆனால் ரசிகர்கள் போன் செய்து, ‘தலைவா படம் சூப்பர்‘, என தொடங்கி தாங்கள் ஆர்வத்தையும், எதிர் கருத்துக்களையும் கூறிவருகின்றனர். பலரும் போனை எடுத்தவுடன், யார் என்று கேட்காமலேயே தங்கள் கருத்துக்களை கொட்டி தீர்க்கின்றனர். அடுத்தபடம் என்ன? எப்போது ரிலீஸ்? என்று கேட்டுக் கொண்டே விஜய்யிடம் பேசுவதாக குதூகலப்படுகின்றனர்.

400–க்கு மேல் மிஸ்ட் கால்

சிலர் இயக்குனர் முருகதாசிடம் பேசவேண்டும் என்று கேட்கின்றனர். சிலர் சமந்தாவிடம் பேசவேண்டும் என்று அடம்பிடிக்கின்றன. மேலும், மிக்சிங் எப்படி, சண்டை காட்சி, பாடல் என தொடங்கி கதை முழுவதும் ஓட்டுகின்றனர்.

ரசிகர்களின் போன் தொல்லையால் ஆசிரியர் போனை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே போட்டுவிட்டு செல்கிறார். மாலையில் வரும் போது 400–க்கு மேற்பட்ட மிஸ்ட் கால் காணப்படும். நிலமை உச்சத்துக்கு போகவே யாரிடம் சொல்வது என்று தவித்த ஆசிரியர் தனது ஓரிரு நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே சிங்கப்பூர், மலேசிய, தைவான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் ரசிகர்கள் அழைக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் பலர் சேர்ந்திருந்து அழைப்பது, கல்லூரி மாணவிகள், விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள், பிற பெண்கள் என பல அழைப்புகள் வருவதால் ஆசிரியர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், தனது தேவைக்கு போன் செய்ய முடியாத நிலையில் உள்ளார். போன் நம்பர் எப்படி தவறுதலாக வந்துள்ளது என்பதும் தெரியாதநிலையில் உள்ளது. இது சம்பந்தமாக இயக்குநர் முருகதாசை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement