Ad Code

Responsive Advertisement

TNTET - பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது.

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

எதிர்ப்பு ஏன்?

இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவின் முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகுதித் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனி மதிப் பெண் சலுகை (வெயிட்டேஜ் மதிப்பெண்) வழங்கி தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை கடந்த மே 30-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஏனெனில், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமலில் இருந்த கல்வி முறைக்கும் மதிப்பெண் வழங்கும் முறைக்கும், தற்போது அமலில் உள்ள கல்வி மற்றும் மதிப்பெண் முறைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இப்போதைய மதிப்பெண் முறையில் அதிக மதிப்பெண் பெற முடியும். அந்த அரசாணையில் பணி மூப்பு, கற்பித்தல் பணி அனுபவத்துக்கு தனி மதிப்பெண் சலுகை வழங்கப்படவில்லை. எங்களுக்கு பல ஆண்டு கற்பித்தல் அனுபவம் உள்ளது.

பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது. இந்த அரசாணையால் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபோதிலும் எங்களின் மதிப்பெண் குறைந்துவிட்டது. இதனால் எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க மறுக்கப்பட்டது.

எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட்டு தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இடைக்காலத் தடை

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதற்குப் பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன், இடைநிலை - பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தள்ளுபடி செய்தது.

அரசு விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தேர்வு எழுதிய பிறகு, விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோருவது ஏற்புடையது அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement