Ad Code

Responsive Advertisement

முன் அனுமதியின்றி வெளிநாடுகளில் கிளை பரப்பினால்...: பல்கலைகளுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் பல்கலை மானிய குழுவின் ( யு.ஜி.சி.,) முன் அனுமதியின்றி, வெளிநாடுகளில், தங்கள் கல்வி நிறுவனம் தொடர்பான திட்டங்களை விரிவுபடுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும், அரசு, தனியார், நிகர்நிலை என 726 பல்கலைகள் மற்றும் 38 ஆயிரம் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பெரும்பான்மையானவை தங்கள் கல்வி நிறுவனங்களின் மையங்களை வெளிநாடுகளில் துவக்கி, தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்துகின்றன. சில நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள ஏஜன்ட்கள் மூலம் மாணவர்களை சேர்த்து, அவர்கள், இங்கு தங்கி படிக்கும் வசதிகளை செய்து தருகின்றன.


இவ்வாறு, மாணவர்களை சேர்க்கும்போது, கல்வி நிறுவனங்கள், குறிப்பிட்ட படிப்புகள் குறித்த சரியான தகவல்களை சேர்க்கையின்போது தெரிவிப்பதில்லை. இதனால், சில நேரங்களில் பிரச்னை எழுகிறது. இதனால், இந்திய பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பிற்கும் சில நேரங்களில், ஆபத்து ஏற்படுவதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கருதுகிறது.

இப்பிரச்னையை போக்க, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. முன்னதாக, அனைத்து பல்கலைகளின் துணை வேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கூறியிருப்பதாவது: சில பல்கலைகள், நேரடியாகவும், ஏஜன்ட்களை நியமித்தும், வெளிநாட்டு மாணவர்களை, தாங்கள் பல்கலையில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்த்து வருகின்றன. மாணவர் சேர்க்கையின்போது, உரிய நடைமுறை பின்பற்றப்படாததால், இந்திய கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை பாதிக்கப்படுகிறது.

எனவே, பல்கலை அல்லது பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகள் என, எந்த ஒரு கல்வி நிறுவனமும், இந்திய துாதரகம் மற்றும் ஹை கமிஷன் அனுமதியின்றி, வெளிநாடுகளில் எவ்வித கல்வி மேம்பாட்டு திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது.

முன் அனுமதி

மேலும், எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும், தங்கள் கல்வி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி.,யின் முன் அனுமதி பெற வேண்டும். இல்லாவிடில், அந்த நிறுவனம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement