Ad Code

Responsive Advertisement

பள்ளிக்குழந்தைகளின் கற்கும் திறன் பற்றிய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது.

கல்வி என்பது அறிவு புகட்டுவதற்கு என்ற நிலை மாறி, பள்ளிக்கூடங்கள் தொடங்குவது வியாபாரமாகிவிட்டது தெரிந்தது தான்; சில ஆண்டாகவே கல்வியின் தரம் குறித்த கவலை அதிகரித்து வருகிறது. கல்வியின் தரத்தை அதிகரிக்க, அதற்கான நிதி அதிகமாக இருக்க வேண்டும். இந்த வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான ஒதுக்கீடு 6 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. நடப்பு ஆண்டு நிலவரப்படி இது ஏறக்குறைய 3 சதவீதமாகவே உள்ளது.
இருப்பினும், கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை உயர்ந்த வண்ணம் உள்ளது சற்று ஆறுதலான விஷயம். கடந்த 2004-05 பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 11,000 கோடி. 2014-15 பட்ஜெட்டில் இது ரூ.82,400 கோடியாக அதிகரித்துள்ளது. அதுபோல் கல்வி வரி மூலமான வருவாயும் 10 ஆண்டுகளுக்கு முன்பு யி5,010 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் 40,105 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த திட்டம் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் ரூ.2.3 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடைகல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) தொடங்கப்பட்டன. ஏழைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டங்களும் உள்ளன.

இந்த அளவு முயற்சி எடுத்தாலும் பள்ளிக்குழந்தைகளின் கற்கும் திறன் பற்றிய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில், 10 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ஏறக்குறைய 8 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் கற்றல் திறன் சரிந்து வருகிறது. 5ம் வகுப்பு மாணவர்களிடையே கடந்த 2007ல் நடத்தப்பட்ட ஆய்வில், கழித்தல் கணக்கு 74 சதவீதம் பேருக்கு தெரிந்திருந்தது. இது 2013ல் 52.3 சதவீதம் ஆகிவிட்டது. பத்தி வாசித்தல் 2007ல் 80.94 சதவீதம் பேருக்கு தெரிந்திருந்தது, 2013ல் 68.2 சதவீதமாக சரிந்துவிட்டது. சில தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி என பெருமை பேசிக்கொள்கின்றன. ஆனால், சராசரி அல்லது அதற்கும் கீழான மாணவர்களுக்கு இவர்களது கற்பித்தல் முயற்சியும், பலனும் என்னவாக இருந்திருக்கும் என்பது கேள்விக்குறியே. இதுபோல், இவ்வளவு நிதி ஒதுக்கியும் கிராமங்களில் உள்ள பல அரசு பள்ளிகளின் நிலை பரிதாபமானது. கிராம பள்ளிகள் வரை நிதியும், தரமான ஆசிரியர் நியமனமும் இருந்தால்தான் கல்வி அர்த்தமுள்ளதாக இருக்கும். எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது கல்விச்செல்வம். இதற்கு எவ்வளவு கோடியும் கொட்டலாம்... அதேநேரத்தில் அது விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement