Ad Code

Responsive Advertisement

சொந்தமாக டாட்டா சுமோ, ஆட்டோ, பள்ளிக் குழந்தைகளுக்கு தினம் சத்தான பொரியல் .... இது அரசு தொடக்கப் பள்ளியில்

பதவி உயர்வு,  ஆசிரியர் அலுவலர்களின் வாழ்வில் முக்கிய தருணங்கள். இந்தப் பதவி உயர்வுகளை நிராகரிக்கும் பலரும் பல நேரங்களில் குடும்ப சூழல்கள் காரணமாகவே நிராகரிக்கின்றனர். அத்தி பூத்தாற்போல் சிலர் மட்டுமே சமூகத்தின் மீதான தங்களின் கடப்பாடு காரணமாக இதை நிராகரிக்கிறார்கள். அப்படியான சில அரிய வகை மனிதர்களில் வில்சன் ராஜும், ஹெலன் மேரியும் அடங்குவர்.
இவர்கள் இருவரும் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்ந்த பின்னர் இருமுறை பட்டதாரி பணி ஆசிரியர் பணி உயர்வு தேடி வந்தபோதும் அதனை நிராகரித்துவிட்டனர். காரணம் இவர்கள் பணியாற்றும் பூச்சிவிளாகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தான். வில்சன் ராஜ் தலைமையாசிரியராகவும் ஜெலன் மேரி உதவி ஆசிரியராகவும் இப்பள்ளியில் பணி புரிகிறார்கள். தமிழகத்தின் தென்கோடி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் பூச்சிவிளாகம் கிராமம் அமைந்துள்ளது.

மாணவர் சேர்க்கையில் குறுகிய காலத்தில் ஒரு செங்குத்து வளர்ச்சியை இப்பள்ளி கண்டதில் இந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊர்பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவ்விருவரும் கூட்டாக உழைத்ததே அடிப்படை காரணம். 1962ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து 2011ல் 24 பேர் என சுருங்கிவிட்டது. இந்த தருணத்தில்தான் வின்செண்ட் ராஜ் பதவி உயர்வு கிடைத்து இப்பள்ளிக்கு வந்து சேர்ந்தார். இவர் பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே மாணவர் எண்ணிக்கை 35 என சற்று முன்னேற்றம் கண்ட சிறுமாற்றத்தை நிகழ்த்தி காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு சற்றேறக்குறைய இருமடங்காக மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது 112 மாணவர்கள் பயிலும் பள்ளியாக 3 ஆண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சி கண்டு நிற்கிறது இப்பள்ளி.

இது என்ன மந்திரம்!! எப்படி இத்தகு வளர்ச்சி கண்டார்கள்? உழைப்பு, கூட்டு உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மட்டுமே இதன் காரணங்களாக இருப்பது நமக்கு தெரிகிறது. பள்ளியிலிருந்து சுமார் 33 கிமீ தொலைவில் இருந்து வரவேண்டிய தலைமை ஆசிரியர் காலை எட்டேகால் மணிக்கு முன்பாகவே ஆஜராகி விட மற்ற ஆசிரியர்களும் இதே நேரத்திற்கு வந்துவிடுகிறார்கள். மாலையில் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கான வகுப்புகள் எல்லாம் முடிந்து 530 மணிக்கே வீடு திரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு பள்ளி ஆசிரியரும் எடுக்காத முன்முயற்சியை இந்தப் பள்ளி எடுத்துள்ளது. பள்ளிக்கென்று ஒரு டாட்டோ சுமோ, மற்றும் ஒரு ஆட்டோ சொந்தமாக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த வாகனங்கள் மூலம் சுமார் 60 மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். இதற்கன டீசல் மற்றும் ஓட்டுநர் சம்பளமாக மாதம் ரூ.15000/- செலவு செய்யப்படுகிறது. இந்த செலவும் ஆசிரியர் ஊர் பொதுமக்கள் கூட்டு உழைப்பிலேயே வருகிறது.
எங்கும் இல்லாத மற்றொரு சிறப்பும் இப்பள்ளிக்கு உண்டு. இந்தப் பள்ளியில் முன்பருவ மழலையர் பிரிவை தொடங்கியிருப்பதுதான் அது. இதில் 32 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ”அரசுப்பள்ளி மக்கள் பள்ளி அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் பலப்படுத்துவோம்” என்னும் முழக்கத்தின் முக்கிய கோரிக்கையாக முன்பருவ கல்வி வகுப்புகளை தொடக்கக் கல்வி திட்டத்தில் இணைக்கவேண்டும் என்பதை முன்வைத்துள்ளது. முன்பருவ கல்வி முற்றிலும் அரசுப் பள்ளிகளில் இல்லாத நிலையில் இதுவே தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளும் மிகப் பெரிய உந்துசக்தியாக பல இடங்களில் இருக்கிறது. முன்பருவ கல்விக்காக தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்லும் குழந்தைகளையும், பெற்றோர்களையும் தனியார் கல்வி கூடங்களுக்கு மனோரீதியாக தயார் படுத்தும் ஏற்பாடாக கூட இதைக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை முறியடித்து இருக்கிறார்கள், பூச்சிவிளாகம் பள்ளியினர்.

இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் சம்பளமான ரூ.2500/-ம் ஊர் பொதுமக்கள் கூட்டு இயக்கம் சார்பில் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் சென்று பார்த்து மகிழ வேண்டிய இன்னொரு அம்சமும் இப்பள்ளியில் உண்டு. அது மழலையர் வகுப்புகள் முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினமும் சத்துணவுடன் சத்தான பொரியல் சமைத்து வழங்குகின்றனர். இந்த காய்கறிகளை அந்தப் பகுதி மக்களே சேகரிதது அவர்களே பள்ளிக்கு வந்து வட்டமாக அமர்ந்து காய்களை வெட்டி கொடுத்துவிட்டு செல்லும் கலையை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை!! இப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ உண்டு, சாக்ஸ் உண்டு, டைரி உண்டு, ஆனால் அத்தனையும் மேற்படி கூட்டு உழைப்பில்தான். ஒரு நாள் ஒரு குழந்தை வரவில்லையென்றாலும் மறுநாள் அக்குழந்தையின் வீட்டுக்கு செல்கிறார் தலைமையாசிரியர். பள்ளி வாராதிருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரிக்கிறார். ஒருவேளை உடல்நிலை சரியில்லையென்றால் மருத்துவம் பார்த்திருக்கிறார்க்ளோ, வசதி இருக்கிறதா என விசாரிக்கிறார். ஒருவேளை வசதி இல்லையென்றாலோ, கூட்டிச்செல்ல ஆள் இல்லை என்றாலோ அந்தப் பணியையும் இவர்களே மனம் உவந்து செய்து குழந்தை உடல்நலம் சரியானவுடன் பள்ளிக்கு மீண்டும் வருவதை உத்தரவாதப்படுத்துகிறார்கள். இந்த மூன்றாண்டு சேவைக்காக மூன்று விருதுகள் இப்பள்ளிக்கு தேடி வந்துள்ளது. ஒன்று, மாவட்ட ஆட்சியரால் மாவட்டத்தின் தலசிறந்த தொடக்கப் பள்ளி என்ற விருது, அதே மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அதிகபட்ச பள்ளி புரவலர்களை சேர்த்த விருது, மற்றும் அந்த சரகத்தில் சிறந்தப் பள்ளிக்கான விருது. பள்ளிக்கென குறுகிய காலத்தில் 125 புரவலர்களைச் சேர்த்து ரூ.1,30,941 ரூபாய் நிதியை சேர்த்துள்ளார்கள்.

பள்ளி சேர்ப்பு இயக்கத்திற்கு கூட இதுவரை நாம் கேள்விப்படாத முறைகளை தலைமையாசிரியர் வின்செண்ட் ராஜ் கடைபிடிக்கிறார். அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு இந்த ஆண்டே திட்டம் தீட்டிவிடுகிறார். ஜனவரி மாவட்டத்திலேயே பள்ளி வயது குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பள்ளி சேர்ப்பதற்கான ஒரு நேர்த்தியான அழைப்பிதழ் அச்சடிக்கப்படுகிறது. அழைப்பிதழோடு முப்பதுக்கும் குறையாத பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர்கள் பொதுமக்கள் என புடைசூழ அடையாளம் காணப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து பள்ளியில் சேர்க்கும்படி பொதுமக்களை வேண்டுகோள் விடுக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களே வந்து அழைப்பு கொடுப்பது புதிதாக சேர்க்க முயல்வோருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. குழந்தைகள் அனைவருக்கும் வட்ட வடிவ மேஜை, நாற்காலி போன்றவற்றை அங்கங்கு கிடைக்கும் சின்ன சின்ன நிதி உதவியை தேடிப் பிடித்து வாங்கி சேர்த்திருக்கிறார்கள்.

அரசுப் பள்ளியில் ஆங்கில பயிற்சி எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படும் ஒன்று. அவ்வகையில் ஆங்கிலம் நன்றாக கற்பிக்க ஏதேனும் சிறப்பு முயற்சிகள் உண்டா என்றால் ஏபிஎல் அட்டை முறை மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது; சின்ன சின்ன பயன்பாட்டு ஆங்கில வார்த்தைகளை வகுப்பறையிலேயே பயன்படுத்த கூறுவோம்; ஆங்கில எழுத்துக்களை படங்களுடன் இணைத்து தோரணம் தோரணமாக வகுப்பறையில் கட்டி தொங்கவிடுவோம்; மாடல் சார்ட், படங்களையும் அவ்வாறே கட்டித் தொங்கவிட்டிருக்கிறோம்; அதன் பெயர்களை கூறுவோம்; இவ்வாறு முதல் வகுப்பு முதல் தொடங்கி கற்பிக்கிறோம்; அது கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது என்று முடித்தார் ஆங்கில ஆசிரியர். இது தவிர விளையாட்டு வழி ஆங்கிலம், விளையாட்டு வழி ஆங்கில போதனை, குழந்தைகளை ஒரு வார்த்தையில் தொடர்புடைய படங்களை ஒட்டச்செய்வது என நீள்கிறது.

பள்ளியும் ஊரும் இணைந்து இயங்குவதால் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. ஒன்பது இலட்சம் நிதியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. பள்ளியில் சேர்க்கை அதிகரித்த வேகத்திற்கு ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, PTA நிதியிலிருந்து மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அந்த சிக்கல் நீங்கி முன்பருவ கல்விக்கு மட்டுமே PTA நிதி பயன்படுகிறது. அடுத்து உங்கள் திட்டம் என்ன என்றால்.. அடுத்த ஆண்டு மாணவ எண்ணிக்கை 150ஐ கடந்துவிடும். அதற்குத்தக்க கட்டிட வசதி வேண்டும், ஆசிரியர்கள் வேண்டும்; நடுநிலைப் ப்ள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று  கூறி சிரிக்கிறார் வின்செண்ட் ராஜ். நமக்குத்தான் அய்ய்யோ நடுநிலை பள்ளியாகிவிட்டால் வின்செண்ட் ராஜ் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருக்கமுடியாது. தகுதி இருக்கிறது, ஆனால் விதிகள் இடம்தராது. வேறு ஒருவர் இந்தப் பள்ளிக்கு வந்தால் வின்செண்ட் ராஜ் போல வருமா என மனம் பதைபதைக்கிறது.

பூச்சிவிளாகம் இச்சிற்றூரில் பள்ளி வயது குழந்தைகள் 12 பேர் மட்டுமே. அத்தனை குழந்தைகளும் இப்பள்ளியிலேயே படிக்கிறார்கள். வின்செண்ட் ராஜ் தலைமையாசிரியர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு கிடைத்து கவுன்சிலிங் செல்லும்போது இவர்தான் கடைசி ஆளாயிருக்க மீதம் இருந்த ஒரே தலைமையாசிரியர் பணியிடம் பூச்சிவிளாகம் மட்டுமே. கவுன்சிலிங் என்றாலும் பூச்சிவிளாகம் பள்ளி என்பது இவரது முதல் தேர்வல்ல. கடைசி புகலிடம். ஆனல இன்று அது முதல்தரமான பள்ளி. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என கேட்டால் உண்மையான உழைப்பு, காலம் தவறாமை, உள்ளூர் சமூகத்தை புரிந்துகொள்ளுதல், அவர்களுடன் இரண்டறக் கலத்தல் என்கிறார்.

பூச்சிவிளாகம் போன்று எல்லாப் பள்ளி வளாகங்களும் மாறும் நாள் எந்த நாளோ?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement