Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் பாதுகாப்பு : சிறப்பு குழு அமைக்கிறது யு.ஜி.சி.,

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி சுற்றுலா, கள ஆய்வு உள்ளிட்டவற்றிற்கு செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண, சிறப்பு குழுவை, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைக்கிறது நாடு முழுவதும் மத்திய, மாநில பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள், அரசு, சுயநிதி கல்லூரிகள் என, 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள், ஆண்டுதோறும், கல்விச்சுற்றுலா, பாடம் சார்ந்த சுற்றுலா, கள ஆய்வு, இன்பச் சுற்றுலா, தொழிற்சாலை ஆய்வு அல்லது விளையாட்டு சார்ந்து வெளியிடங்களுக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் இடங்களில், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற இடங்களில், அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். மேலும், இமாசல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற தெலுங்கானா மாநில மாணவர்கள், அங்குள்ள சட்லஜ் நதியில் இறங்கிய போது, அணை திறந்துவிடப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 23 பேர் பலியாகினர். இது போன்ற பல்வேறு சம்பவங்கள், நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுக்க, யு.ஜி.சி., பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை தடுப்பதற்கான விதிகளை வகுக்க, ஒரு வல்லுனர் குழுவை யு.ஜி.சி.,
அமைக்கிறது. இந்த குழு வலியுறுத்தும் விஷயங்களை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் செயல் படுத்தவும், யு.ஜி.சி., முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, அனைத்து பல்கலைகளுக்கும்
சுற்றறிக்கை ஒன்றை, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ளார்.
அதில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகளும், மூன்று வாரங்களுக்குள், மாணவர்களை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement