Ad Code

Responsive Advertisement

'பைக்'கில் பறக்குது சுற்றறிக்கை! : ஹாயாக சுற்றும் பள்ளி மாணவர்கள்

'பள்ளிகளில் லைசன்ஸ் இல்லாமல், இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது' என்ற கல்வித் துறையின் உத்தரவையும் மீறி, மாணவர்கள் சிலர் ஆபத்தை அறியாது, இரு சக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். இதில், பள்ளிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

'தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத பட்சத்தில், வாகனங்களை பள்ளிக்கு எடுத்து வர அனுமதிக்கக்கூடாது; விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களது வாகன உரிம ஆவணத்தை சரிபார்த்த பின், ஓட்ட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், வாகனத்தை பறிமுதல் செய்து, உரிய மாணவரது பெற்றோரை அழைத்து எச்சரித்த பின், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.
'இதை அலட்சியப்படுத்தும் பட்சத்தில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, விபத்து ஏற்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 250க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், 272 மெட்ரிக் பள்ளிகள், மூன்று ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 11 சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் பயணித்துவருவது, தொடர்கதையாகவே உள்ளது.
கோவை தடாகம் ரோடு, திருச்சி ரோடு, விளாங்குறிச்சி ரோடு, அவிநாசி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனங்களில் சீறிப் பாய்ந்துவருகின்றனர். குழந்தைகள் விரும்பியதையெல்லாம் செய்யும் சில தவறுகளால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.
அதேசமயம், இதுபோன்ற நடவடிக்கைகளில் பள்ளிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது,''வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி நுழைவாயிலில் கண்காணித்து தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகள் இதை கண்டுகொள்வதில்லை என்ற புகார் வந்தால், தொடர்புடைய தலைமையாசிரியரை அழைத்து எச்சரிக்கப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement