Ad Code

Responsive Advertisement

கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் மாணவ மாணவியரை நின்று கொண்டு அழைத்துச் சென்றால் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் மாணவ மாணவியரை அனுமதிக்கப்பட்ட இருக்கையைவிட கூடுதலாக ஏற்றி, அவர்கள் நின்று கொண்டு பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இது விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு தட்டெழுத்து-கணினி பள்ளிகள் சங்கச் செயலாளர் சோம சங்கர், தமிழக முதல்வருக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து சிவகாசி, கிருஷ்ணன்கோவில், ராஜபாளையம் பகுதிக்கு கல்லூரி பேருந்துகளில் அளவுக்கு அதிகமான மாணவ மாணவிகள் நின்று கொண்டு பயணிப்பதாயும், இதனால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து நிலவுவதாயும் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு, சோம சங்கருக்கு பதில் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தின் விவரம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து சரகங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக சிறப்பு சோதனைகள் மூலம் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு நன்முறையில் இயங்கி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், இத் துறையின் களப் பணியாளர்களால் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு, விதிகளை மீறும் வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, இணக்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவிகளை நெருக்கடியாக அமர வைத்தும், நிற்கவைத்தும் பயணிக்க வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி கல்லூரி வாகனங்களுக்கு சிறப்பு சோதனைகள் செய்து, அனுமதிக்கப்பட்ட இருக்கைகளைவிட அளவுக்கதிகமான மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தற்போது அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement