Ad Code

Responsive Advertisement

கும்பகோணம் தீ விபத்து வழக்கின் தீர்ப்பு வேதனையளிக்கிறது: பெற்றோர் குமுறல்

 கும்பகோணம் தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக, உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.


கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

தீர்ப்பு குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில்: "எங்கள் குழந்தைகள் அடைந்த சித்திரவதைக்கு தகுந்த நீதி கிடைக்கவில்லை. 11 பேரை விடுவிக்க ஏன் 10 ஆண்டுகள் நாங்கள் காத்திருக்க வேண்டும்” என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

மற்றொரு பெற்றோர் ஒருவர் கூறுகையில்: "சம்பவம் நடந்த போது பள்ளியில் இருந்த ஆசிரியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 94 குழந்தைகள் இறந்தபோது, ஆசிரியர்கள் மட்டும் எப்படி எந்த காயமும் இன்றி தப்பினர். அவர்கள் குழந்தைகளை மீட்க முயற்சிக்கவில்லை. பொறுப்பற்ற ஆசிரியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது" என்றார்.

தீர்ப்பு அளித்த அதிருப்தியின் உச்சத்தில் இருந்த மற்றொரு பெற்றோர், "முதலில் இந்த வழக்கில் 3 பேரை விடுவித்தனர். இன்று 11 பேரை விடுவித்துள்ளனர். இப்பட்டி கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிகளை விடுவிப்பதை காட்டிலும் மொத்தமான அனைவரையும் விடுவித்துவிடுங்கள். குழந்தைகளை இழந்த நாங்கள் இவர்களுக்கு பதிலாக சிறை தண்டனையையும் சேர்த்து அனுபவித்துக் கொள்கிறோம்" என அழுதார்.

தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் ஒருவர், பள்ளிக்கூடத்தின் வாசல் கதவுகளை பூட்டிவைத்ததாலேயே எங்களால் வெளியில் வர முடியவில்லை. கதவுகள் மட்டும் திறந்திருந்தாள் நாங்கள் அனைவருமே தப்பித்திருப்போம். எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் அந்தப் பள்ளியில் இல்லை என்பதை இப்போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விபத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார்.

மற்றொரு மாணவி பரமேஸ்வரி, தீர்ப்பு எவ்வளவு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இங்கே கூக்குரலிட்டு அழுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இவர்கள் அலறலே இப்படி இருக்கிறது என்றால் சிறு குழந்தைகள் தீயில் கருகிய போது எப்படி கதறியிருப்பார்கள்? அதற்கு இது தான் தீர்ப்பா? இதற்க்குத்தான் 10 ஆண்டுகள் காத்திருந்தோமா? என கேள்வி எழுப்பினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement