Ad Code

Responsive Advertisement

'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு

மதுரை: மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்ததில், தமிழ், ஆங்கில பாடங்களில் மாணவர்கள் அதிகம் தோல்வியுற்றதும், ஒரு பாடத்தில் மாணவர்கள் தோல்வியும் அதிகரித்திருந்தது. ஒரு பாடம் தோல்வி மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் மூன்றாக உயர்ந்திருக்கும் என்பது தெரியவந்தது.

இதன் விளைவாக வரும் அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியை இலக்காக கொண்டு, 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டத்தை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மீண்டும் துவக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும். மாணவர்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும், ஆசிரியர்கள் நினைத்தால், அதை சரி செய்து அவர்களை நல்லமுறையில் படிக்க வைக்க முடியும்.
சென்றாண்டு ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவரின் ஆசிரியர்கள் 150 பேரை அழைத்து விளக்கம் கேட்டேன்.
'மாணவர்கள், ஆசிரியர்களின் பேச்சை கேட்பதில்லை' உட்பட பல்வேறு காரணங்களை கூறினர். இதையடுத்து, முதல் மாதாந்திர தேர்வில், தோல்வியுறும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், 'நுாற்றுக்கு நுாறு' திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து எனக்கே நேரடியாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்றல் பணிகளை திட்டமிட வேண்டும். மாணவர்களை முழுமையாக கண்காணித்து, அவர்கள் பிரச்னை குறித்தும் ஆராய வேண்டும். பிளஸ் 2வை அடுத்து, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement