Ad Code

Responsive Advertisement

டாக்டர் 'சீட்' பெற்ற கூலித் தொழிலாளியின் மகள்: கட்டணம் செலுத்த வசதியின்றி தவிக்கும் பரிதாபம்

ஆத்தூர் அருகே, மின்னல் தாக்கி இறந்த கூலித் தொழிலாளி மகளுக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்துள்ளது. கட்டணம் செலுத்த வழியின்றி, படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகிறார்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வளையல் காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்; கூலித் தொழிலாளி. இவர்,2007, ஜூன் 3ல், மின்னல் தாக்கி இறந்தார். அதன்பின், அவரது மனைவி சுசீலா, 39, கூலி வேலை செய்து, தன் மகள் இந்துமதியை, 17, அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன், பிளஸ் 2 வரை, தமிழ் வழியில், கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக படித்தார். பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,135 மதிப்பெண் பெற்றார். இவரது மருத்துவ படிப்புக்கான கட்- ஆப் மார்க், 195.5 ஆக இருந்ததால் கலந்தாய்வில் கலந்து கொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில், இந்துமதிக்கு, எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. ஜூலை 3ல், மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி கடிதமும் வந்துள்ளது. மருத்துவ படிப்பு படிக்க, கல்வி கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் செலுத்த வழியின்றி மாணவி பரிதவித்து வருகிறார்.
நமது நிருபரிடம், இந்துமதி கூறியதாவது:
டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்ததால், 1,135 மதிப்பெண் எடுத்தேன். மருத்துவ கட் ஆப் மார்க், 195.5 ஆக இருந்ததால், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம், 12,500 ரூபாய் உட்பட, ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால், ஐந்தாண்டுக்கு செலவு செய்து, டாக்டர் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. படிப்புக்கு உதவி கிடைத்தால், மேற்கொண்டு டாக்டர் படிப்பை தொடருவேன். டாக்டராகி, என்னை போல் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வேன். படிக்க உதவி செய்பவர்கள், 94895 85853 என்ற மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement