Ad Code

Responsive Advertisement

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் கல்வி கட்டணம் கிடைக்கும்

மும்பையில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியும் 25 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கவேண்டும். இந்த இடங்களை அரசு நிர்வாகம் நிரப்பும். தற்போது மும்பையில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆன்லைனில் நிரப்பப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் நர்சரியிலேயே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் மாநில துவக்க கல்வி இயக்குனர் மகாவீர் மானே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்வி கட்டணம் பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படும்.

நர்சரி, ஜூனியர் கேஜி, சீனியர் கேஜி வகுப்புகளுக்கு பள்ளிகள் இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு கல்வி நிறுவனங்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு எப்படி தங்களால் இலவச கல்வி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மிகப்பெரிய கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவர் கூறுகையில், இந்த ஆண்டு கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 46 மாணவர்களை சேர்த்துள்ளோம்.

இதில் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு 22 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10.12 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். இதை எப்படி பள்ளிகள் தங்களது சொந்த பணத்தில் இருந்து போட முடியும். அரசு ஆரம்பத்தில் இருந்தே கல்வி கட்டணத்தை கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இது குறித்து மகாவீர் மானேயிடம் கேட்டதற்கு, கல்வி நிறுவனங்களின் கவலை குறித்து மாநில கல்வி செயலாளருடன் பேசி முடிவு செய்யப்பட இருக்கிறது.

மாநில அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே முன்னதாக மானேயை சில தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் 9 ஆயிரம் நன்கொடையும், 6 ஆயிரம் கல்வி கட்டணமும் கேட்பதாக புகார் செய்தனர். அவர்களின் புகாரை தொடர்ந்தே புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி வரை ஆன்லைனில் அட்மிஷன் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement