Ad Code

Responsive Advertisement

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் குறித்த அரசு அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) வெளியிடப்படுகிறது.
மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க மருத்துவக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மே 3 முதல் பி.இ. விண்ணப்பம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகின்றன. பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் பி.இ. படிப்பையும், உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகியவற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளையும் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
எனினும் கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்து உயிரியல் படித்த மாணவர்கள்கூட பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது உண்டு.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் விநியோகிக்க உள்ளது.
2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,555; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 சதவீத இடங்கள், அதாவது 383 எம்.பி.பி.எஸ். இடங்கள் போக மீதமுள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தையும் சேர்த்து ஆண்டுக் கட்டணம் ரூ.12,290தான். இந்த இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறும்.
900 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து வழக்கம்போல் ஒரே விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்தாலே போதுமானது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கிடைக்காத மாணவர்களுக்கு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement